22 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி! 22 தங்கப் பதக்கத்துடன் பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

Photo of author

By Sakthi

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் கடைசி நாளான நேற்று இந்தியா தங்கப் பதக்கம் வென்று அசத்தியது இதன் மூலமாக 22 தங்கம் உட்பட 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் 22வது காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. இதன் கடைசி நாளான நேற்றைய தினம் பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் மகளிருக்கான பேட்மின்டன் ஒற்றை பிரிவு இறுதிப் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் பி.வி. சிந்து கனடா வீராங்கனை மிட்செல் லீயை சந்தித்தார்.

இதில் ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடிய இந்திய வீராங்கனை பிவி சிந்து 21-15 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். காமன்வெல்த் போட்டியில் அவர் முதன்முறையாக தங்கம் வென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் சந்திரசேகர் ஜோடி இங்கிலாந்து நாட்டின் பென்லேன் மற்றும் சென் வெண்டி ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஆட்டத்தை தங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த இந்திய ஜோடி 21-15, 21-13 என்ற நேர்செட் கணக்குகளில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தன் வசப்படுத்துவது.

ஆண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கல பதக்கத்தை வென்றார். மற்றொரு தமிழக வீரரான சரத்கமல் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் வியாம்பிட்ச்போர்ட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சரத் கமல் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதினர். இதில் 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி காமன்வெல்த் ஹாக்கியில் தொடர்ந்து 8வது முறையாக தங்கத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி வெள்ளி பதக்கத்தை வென்றது.

காமன்வெல்த் போட்டியை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா 67 தங்கத்துடன் முதல் இடத்தையும், போட்டியை நடத்திய இங்கிலாந்து அணி 57 தங்கத்துடன் 2வது இடத்தையும், பிடித்தனர். 26 தங்கத்துடன் 3வது இடத்தை கைப்பற்றியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் கடைசி நாளான நேற்று மட்டும் 4 தங்கம் 1 வெள்ளி மற்றும் வெண்கலம் உள்ளிட்டவற்றை தன் வசப்படுத்தியது. இதன் மூலமாக ஒட்டுமொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப்பதக்கம், என ஒட்டு மொத்தமாக 61 பதக்கங்களுடன் நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருக்கிறது.

காமன்வெல்த் போட்டிகள் நிறைவு விழா கோலாகல நெகிழ்ச்சியுடன் நடந்தது அலெக்சாண்டர் மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்திய குழுவை டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிஹாத் சரீன், உள்ளிட்டோர் தேசிய கொடியையேந்தி வழிநடத்திச் சென்றார்கள்.