ஒரத்தநாடு அருகே விபத்தில் சிக்கி கிடந்தவரிடம் இருந்த ரூ4.20 லட்சம் ரொக்கத்தை அவரது தந்தையிடம் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒப்படைத்தனர். இதனால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது37). இவர் பல பணிகளுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலையாட்கள் அனுப்பும் பணி செய்து வருகின்றார். இவ்வாறு அனுப்பிய பணியாளர்களுக்கு இன்று சம்பளம் கொடுப்பதற்காக ரூ4.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு அதிகாலை 5 மணியளவில் ஒரத்தநாட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர் செல்லும் வழியான பாப்பாநாட்டில் தனியார் பள்ளி அருகில் இருக்கும் சாலையில் உளுந்தை காய வைப்பதற்காக நேற்று இரவே கொட்டி குவியலாக வைத்திருந்தனர். அதிகாலை என்பதால் அந்த குவியல் அலெக்சாண்டருக்கு தெரியாததால், அதில் மோதி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.
இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வந்து அலெக்சாண்டரை ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது அலெக்சாண்டரிடம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 309 ரொக்கம் இருந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ணன்(30) மற்றும் டெக்னீஷியன் தவக்குமார்(32) ஆகியோர் அப்பணத்தை பத்திரமாக எடுத்து வைத்தனர்.
உடனடியாக அலெக்சாண்டரை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் அலெக்சாண்டரின் தந்தை செல்வராஜை தொடர்பு கொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த அவரின் தந்தையிடம் ரொக்க பணத்தை ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒப்படைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ணன் மற்றும் டெக்னீஷியன் தவக்குமார் ஆகியோரின் இச்செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.