தமிழகத்தில் ராகுலை வரவேற்ற காங்கிரஸ் கட்சியினர்! காற்றில் பறந்த நீதிமன்ற உத்தரவு!

0
77

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் 3500 கிலோமீட்டர் யாத்திரையை நேற்று மாலை ஆரம்பித்து வைத்தார். இதற்கு முன்னதாக, நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரிலிருக்கின்ற முன்னாள் பிரதமரும், தன்னுடைய தந்தையுமான ராஜீவ் காந்தியின் நினைவகத்திற்கு வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவரை வரவேற்ற காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜீவ் காந்தி நினைவகத்திற்கு வெளியே 100க்கும் மேற்பட்ட பதாகைகளை வைத்திருந்தார்கள்.

சரியான பிடிமானம் இல்லாததால் சாலையோரம் பேனர்கள் சாய்ந்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலை ,சர்வீஸ் சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், உள்ளிட்டோர் செல்ல முடியாமல் இடையூறு உண்டானது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையைச் சார்ந்த சுபஸ்ரீ என்ற பெண் பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பதாகை அவர் மீது விழுந்ததில், லாரி மோதி அதே இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது.

இதனைத் தொடர்ந்து பொது இடங்களில் பதாகை வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உள்ளிட்டவை தடை விதித்தனர். ஆரம்பத்தில் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்ட இந்த உத்தரவு, சில மாதங்களாக மீறப்பட்டு வருகிறது. மீண்டும் பதாகை வைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நூற்றுக்கும் அதிகமான பதாகைகள் அனுமதியின்றி காங்கிரஸ் கட்சியினரால் வைக்கப்பட்டது.

இவை சாலையில் விழுந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தனர். நெடுஞ்சாலையில் பதாகை வைப்போர் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அதேபோல கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை ஓரங்களில் அனுமதியில்லாமல் பதாகை வைப்பது, கட்சி கொடிகள் கட்டுவது, உள்ளிட்டவை நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன.

மேலும் திருமணம், பிறந்தநாள், நினைவஞ்சலி, போன்ற நிகழ்ச்சிகளுக்கு கூட நெடுஞ்சாலை வாரத்தில் பதாகை வைப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வேண்டிய காவல்துறையைச் சார்ந்தவர்கள் கண்டும், காணாமலும், இருந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.