சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து பதியப்படும் வழக்குகள்!
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட வாக்குசாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட்டதாக கூறி தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர்.
அவர்கள் தாக்கியதில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் மீது வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்னிலையில் தேர்தல் முறைகேடுகளை தடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில்,
நான் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் மீன்பிடி வலை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தேன். சுமார் 8 கிரவுண்டு நில பரப்பளவில் அந்த தொழிற்சாலை உள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் எனது தொழிற்சாலையில் பங்குதாரராக இருந்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு என்னை மிரட்டி எனது தொழிற்சாலையை அபகரித்து கொண்டார்.
நவீன்குமாரின் இந்த சட்டவிரோத செயலுக்கு, அப்போது அமைச்சராக இருந்த ஜெயக்குமார் பின்னணியில் இருந்தார். இந்த சதித்திட்டத்தில் ஜெயக்குமாருக்கும் பங்கு உண்டு. எனவே, எனது நிலம் மற்றும் தொழிற்சாலையை மீட்டுத்தருவதோடு, இதில் சட்டவிரோதமாக செயல்பட்ட ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.