நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்திய மாநில தேர்தல் ஆணையம்!

Photo of author

By Sakthi

தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலிக் காட்சியின் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் முன்னேற்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள், உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களின் இருப்பு, உள்ளிட்டவை தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக விவாதம் செய்யப்பட்டது. புதிதாக வார்டு மறுவரையறை செய்யப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு புகைப்பட வாக்காளர் பட்டியல் தயார் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு முதல் நிலை சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து அலுவலர்களும் நோய்த்தொற்று தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதை உறுதி செய்யவும் இதில் கேட்டுக் கொள்ளப்பட்டது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.