புதிய வகை நோய் தொற்று பரவல்! சென்னையில் நாள்தோறும் 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை!

0
99

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில நாட்களாக அதிகரித்து வரும் நோய் தொற்று மற்றும் மரபியல் மாற்றம் அடைந்த புதிய வகை நோய் பரவுவதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது. அப்போது ககன்தீப்சிங் பேடி தெரிவித்திருப்பதாவது.

நோய்த்தொற்று பரவலை பொறுத்தவரையில் அதிகப்படியான பரிசோதனைகளை மேற்கொண்டு பாதித்த நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தால் மட்டுமே நோய்த்தொற்றை கட்டுப்படுத்த இயலும் என்பது கடந்த கால நிகழ்வுகளில் தெரியவந்திருக்கிறது. ஆகவே தற்சமயம் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் 22 ஆயிரம் நோய்த்தொற்று பரிசோதனைகளை 25 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் நோய்த்தொற்று மற்றும் புதிய வகை நோய் தொற்று உள்ளிட்ட வற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் நோய்த்தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சளி மற்றும் காய்ச்சல் இருமல் உள்ளிட்ட அறிகுறி இருக்கின்றவர்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக பகுதிகளில் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நோய் தொடர் பரிசோதனை அதிகரிக்கும் விதத்தில் அனைத்து சந்தைப் பகுதிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள், உள்ளிட்ட பணியிடங்கள், மருத்துவ கல்லூரிகள், அறிவியல் கலை கல்லூரிகள், பொறியியலாளர் கல்லூரிகள் மற்றும் மற்ற கல்வி நிறுவனங்களில் விடுதிகள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், உள்ளிட்ட பகுதிகளிலும் பொது மக்களுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொண்டு அதன் அடிப்படையில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நோய்தொற்று பாதித்தவர்களை அனுமதித்து சிகிச்சை வழங்கும் சுமார் 134 மருத்துவமனைகள் இருக்கின்றன. அந்த 134 மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை முடிந்து செல்லும் நபர்கள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்கள் தொடர்பான விவரங்களை அந்தந்த மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்படி சிகிச்சை முடிந்து வெளியேறும் நபர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை தொடர்பான மண்டல நல அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நோய்தொற்று பாதித்தவர்களுக்கு முதல்கட்ட உடற் பரிசோதனை செய்யும் மையங்கள் ஏற்கனவே 11 பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. தற்சமயம் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், நாளை முதல் 15 இடங்களில் முதற்கட்ட பரிசோதனை மையங்கள் உள்ளிட்டவற்றை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார்.