சர்ச்சைக்குரிய வகையில் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் கூட்டம்! பள்ளிக்கல்வித் துறை விசாரணை

Photo of author

By Anand

சர்ச்சைக்குரிய வகையில் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் கூட்டம்! பள்ளிக்கல்வித் துறை விசாரணை

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாகக் கடந்த வாரத்தில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து விசாரிக்கையில் அத்தகைய கூட்டம் எதுவும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சார்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட அந்த நாளில் சம்பந்தப்பட்ட பள்ளியில் திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடத்தப்பட்டதாகவும், அதில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, விதிகளை மீறிச் செயல்பட்டதாகப் புகார் எழுந்ததால் சம்பந்தப்பட்ட பள்ளியிடம் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வாயிலாக பள்ளிக் கல்வித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதற்கு பதிலளித்த அந்த பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளியில் அத்தகைய கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை  என்று கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.