வெளவால்களினால் தான் கொரோனா! சீன ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊஹான் நகரில் முதன்முதல் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று வரை உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவ தொடங்கிய போதே, சீனா தான் அந்த வைரஸை உருவாக்கியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. ஆனால் சீனா அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.
கொரோனாவின் தோற்றம் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் வெளவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸ்களைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர். இதில் ஒன்று மரபணு ரீதியாக தற்போது உள்ள கோவிட் -19 வைரஸுக்கு மிக நெருக்கமானதாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தின் ஷாண்டோங் பல்கலைக்கழகத்தின் வைஃபெங் ஷி மற்றும் அவரது சகாக்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர்.
வெளவால்களில் எத்தனை கொரோனா வைரஸ்கள் உள்ளன, எத்தனை வைரஸ்களுக்கு மக்களுக்கு பரவக்கூடிய ஆற்றல் உள்ளது என்பதை அவர்களின் ஆய்வு காட்டுகிறது. ஆராய்ச்சியாளர்கள் மே,2019 மற்றும் நவம்பர்,2020 க்கு இடையில் சிறிய, காடுகளில் வசிக்கும் வௌவால்களிடமிருந்து, சிறுநீர், மலம் மற்றும் வெளவால்களின் வாயில் உள்ள சளி மாதிரிகளையும் பரிசோதித்தனர்.
வெவ்வேறு வௌவால் இனங்களில் இருந்து 24 நாவல் கொரோனா வைரஸ் மரபணுக்களை இந்த குழு ஆய்வு செய்தது. இவற்றில், ரைனோலோபஸ் புசிலஸ் (Rhinolophus pusillus) எனப்படும் வௌவால் இனத்திலிருந்து எடுக்கப்பட்ட RpYN06 என்ற வைரஸ் மாதிரி, தற்போதைய தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸுடன் மரபணு ரீதியாக மிகவும் ஒத்ததாகக் கண்டறியப்பட்டது. இருப்பினும், ஸ்பைக் புரதத்தில் மரபணு வேறுபாடுகள் இருந்தன என்றும், உயிரணுக்களுடன் இணைக்கும்போது வைரஸ் பயன்படுத்தும் குமிழ் போன்ற அமைப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கொரோனாவின் தோற்றம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராயும்போது, பெரும்பாலும் ஒரு வௌவால் தான் ஆதாரமாகத் தெரிகிறது. அதாவது வௌவால்கள் மூலமே கொரோனா வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். வௌவால்கள் மற்றும் மனிதர்களைத் தவிர, பன்றிகள், கால்நடைகள், எலிகள், பூனைகள், நாய்கள், கோழிகள், மான் உள்ளிட்ட பல்வேறு வகையான உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகளை கொரோனா வைரஸ்கள் பாதிக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.