கொரோனா பாதித்தவரை டிஸ்சார்ஜ் செய்தது எப்படி? ஒரே பெயரால் நடந்த குழப்பம்

Photo of author

By Parthipan K

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மாற்றி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 19 ஆம் தேதி அன்று துத்துக்குடியை சேர்ந்த ஒருவர் கொரோனா பாதித்து அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதே மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாக வைகுண்டத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனை அடுத்து 20 நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களை டிஸ்சார்ஜ் செய்த போது அதில் கடந்த 19 ஆம் தேதியே வந்த தூத்துக்குடியை சேர்ந்த அவர் வைகுண்டத்தை சேர்ந்தவர்க்கு பதிலாக மாற்றி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதனையடுத்து ஒரே பெயரால் மாற்றி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தெரிய வந்ததை அடுத்து அவர் அந்த மருத்துவமனை டீனை தொடர்பு கொண்டு விசாரித்து மாற்றி அனுப்பப்பட்ட நபர் ஒரு மணி நேரத்தில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை அடுத்து சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அந்த டிஸ்சார்ஜ் செய்த நபர் வீட்டிற்கு சென்ற போது அங்கு அவர் இல்லாததால் மாவட்டம் முழுவதும் தேடி கொண்டிருந்தனர். இறுதியில் எங்கயோ சுற்றி விட்டு இரவு வீட்டிற்கு வந்த அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.