திமுகவில் அடுத்த கொரோனா தொற்றுக்கு உள்ளான முன்னாள் எம்.எல்.ஏ

Photo of author

By Parthipan K

சென்னை:

சமீபத்தில் திமுக தலைமை ஏற்பாடு செய்திருந்த ஒன்றிணைவோம் வா திட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில் மீண்டும் அக்கட்சியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தியாகராய நகர் முன்னாள் எம்எல்ஏவான வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

திமுக இலக்கிய அணி இணைச்செயலாளராக பதவி வகிப்பவரும், சென்னை தியாகராய நகர் தொகுதியின் முன்னாள் எம் எல் ஏவுமான வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் அதிமுக சார்பில் சென்னை தியாகராய நகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவு அளித்துவந்தார். அதன் பிறகு தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவிலிருந்து விலகி கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விபி கலைராஜனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டதால், வி.பி. கலைராஜன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.