அக்டோபர் மாதத்தில் கொரோனா உச்சத்தை அடையும்! வெளியான அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

Photo of author

By Parthipan K

சென்னை மற்றும் தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்த டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆராய்ச்சி ஒன்றை செய்துள்ளது.இந்த ஆய்வில் கொரோனா வருகின்ற அக்டோபர் மாதத்தில் உச்ச நிலையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்கும் பொருட்டு இந்த நிலை மாறும் எனவும் கூறியுள்ளனர்.

இப்போது அறிவித்துள்ள முழு முடக்கம் காரணமாக 2 அல்லது 3 வாரங்களுக்கு மட்டும் தாக்கம் குறையும், அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாத துவக்கத்தில் கொரோனா பாதிப்பு உச்ச நிலையை அடையும் என எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கூறியுள்ளது .

இது குறித்து டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் மற்றும் டாக்டர் ஜி .ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கூறுகையில், இந்த மாத இறுதிக்குள் சென்னையில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் 71,000 ஆகவும், ஜூலை மாதத்தில் இது 1.5 லட்சமாகவும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்துள்ளனர்.

தொற்று பற்றிய கண்டுபிடிப்பில் ஜூன் 30 ஆம் தேியில் கொரோனா பாதிப்பு சென்னையில் 71 ஆயிரத்து 24, மேலும் இது தமிழகம் முழுவதும் 1லட்சத்து 22 ஆயிரத்து 449 ஆகவும், ஜூலை மாதம் 15 தேதி இது 1 லட்சத்து 50 ஆயிரத்து 244 எனவும், தமிழகத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 281 ஆக தொற்று அதிகரித்து காணப்படும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றினால் இறப்புகள் அதிகரிக்கப்படும் எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி சென்னையில் இறப்பு ஜூலை மாத மத்தியில் 1,654 ஆகவும், மேலும் இது தமிழகம் முழுவதும் 3,072 ஆகவும் இருக்கக்கூடும் என கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து தொற்று நோய் மருத்துவர் ஜெயபிரகாஷ் கூறுகையில் கொரோனா பாதிப்பு உச்ச நிலை அடைவதை தடுக்க முடியவில்லை என்றாலும் ஊரடங்கை கடைபிடிப்பது மூலம் கொரோனா உச்சம் தொடுவதை தாமதப்படுத்தலாம் என கூறியுள்ளார்.