நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு விதிமுறை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
கேரளாவில் அடுத்த ஒரு வருடத்திற்கு சில தளர்வுகளுடன் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் சமூக இடைவெளி போன்ற கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார். தமிழகத்தில் இந்த ஜூலை கடைசிவரை ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புரோட்டா மாஸ்க் தயாரித்த வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் மாட்டுதாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகம் ஒன்றில் முக கவசம் அணிய வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் முக கவசம் வடிவில் புரோட்டா தயாரித்து 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த செய்தி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.