மூலிகை மைசூர்பாக் உண்பதால் கொரோனா குணமாகும் என்று கூறிய கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் தொட்டிப்பாளையம் பகுதியில் நெல்லை லாலா ஸ்வீட் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் 19 மூலிகைகள் கொண்டு மூலிகை மைசூர்பாக் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இதனை உண்பதால் கொரோனா குணமாகும் என்றும் கடந்த 3 மாதங்களாக விற்பனை களைகட்டியுள்ளது.
இந்த மூலிகை இனிப்பு தகவலை நாட்டின் பிரதமர் முன்னிலையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், உலக அரங்கில் அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று சுவரொட்டி அடித்து ஊர் முழுக்க விளம்பரப்படுத்தினார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து மூலிகை மைசூர்பாக் கொரோனா பாதிப்பை குணப்படுத்துவது உண்மைதானா என்கிற வகையில் உணவுத்துறை, சுகாதாரத்துறை மற்றும் சித்தா மருத்துவத்துறையைச் சார்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதையடுத்து கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அரசின் அனுமதி இல்லாமல் இப்படி விற்பனை செய்வது தவறு என்று கூறியதோடு தவறான தகவலை பரப்பியதாக நெல்லை லாலா இனிப்பு கடைக்கு சீல் வைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் மதிப்பிலான 120 கிலோ மூலிகை மைசூர்பாக் பறிமுதல் செய்யப்பட்டது. தவளை தன் வாயால் கெட்டதுபோல் தனது வியாபாரத்தை கடையின் உரிமையாளரே கெடுத்துக் கொண்டார்.