தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமான பரவி வரும் நிலையில் வைரஸால் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஊரடங்கு விதிமுறை தளர்த்தப்பட்டு தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் விதிமுறையுடன் இயங்கி வருகின்றன.
கொரோனா தொற்றினால் நீண்ட நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு 5 நாட்கள் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பணி இருந்த நிலை மாற்றப்பட்டு தற்போது வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் வேலை செய்யும் நாட்களாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிக விடுப்பின் காரணமாக அரசிடம் போடப்பட்ட பல்வேறு தனியார் ஒப்பந்தகாரர்கள் பல வாரங்களாகியும் பெற வேண்டிய பணத்தை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் காலை 10:30 மணிக்குள் பணிக்கு வரவேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தினசரி ஊழியர்களின் வருகை நேரம் குறித்த தகவலையும் மேலிடத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும், பல்வேறு பணிகள் கிடப்பில் இருப்பதால் வேலைகளை விரைந்து முடிக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.