கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு டுவிட்டர் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் பரவி உள்ளது. அமெரிக்காவிலும் கொரோனா வைரசுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 2 பேர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்ற நாடுகளைப் போல், அமெரிக்காவும் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரின் தலைமை அலுவலகம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளின் டுவிட்டர் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அவரவர் வீடுகளில் இருந்தபடி பணியாற்றுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.