ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா : உலகம் முழுவதும் 46 ஆயிரத்திற்கு மேல் பலி!

Photo of author

By Parthipan K

சீனாவின் வூகான் மாநகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 9 லட்சத்து 28 ஆயிரத்து 98 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது, மேலும் 1 லட்சத்து 92 ஆயிரத்து 632 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 6 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது, அதில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மோசமான நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல் பரவி ஐரோப்பிய நாடுகளில் அதிக எண்ணிக்கைகளில் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், ஃபிரான்ஸ், இங்கிலாந்து, ஆகிய நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இத்தாலியில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது, அதில் நேற்று ஒரே நாளில் 727 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது, அதில் நேற்று ஒரே நாளில் 667 பேர் பலியாகியுள்ளனர்.

ஃபிரான்ஸில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது, அதில் நேற்று ஒரே நாளில் 509 பேர் பலியாகியுள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது, அதில் நேற்று ஒரே நாளில் 563 பேர் பலியாகியுள்ளனர்.