கத்தாரிலிருந்து திருநெல்வேலிக்கு வந்த 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால், போக்குவரத்து வசதி என்பது முற்றிலும் தடைபட்டது. இதனால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இருந்தவர்கள், தங்களது சொந்த ஊர் திரும்புவதற்கு தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டு பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்ததால் அவர்களும் விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் இந்தியாவுக்கு தொடர்ந்து அழைத்து வரப்படுகிறார்கள்.
இந்நிலையில் கத்தார் நாட்டில் சிக்கித் தவித்து வந்த இந்தியர்கள் விமானம் மூலமாக தாய் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அதில், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வந்து பின் அங்கிருந்து தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விமானம் மூலம் மதுரைக்கு வந்து இறங்கினர். அதில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் சிறப்பு பேருந்துகள் மூலம் நெல்லைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையடுத்து பாளையங்கோட்டையில் உள்ள சோதனை சாவடியில் பேருந்து மடக்கப்பட்டு, அங்கிருந்து அருகே உள்ள சித்த மருத்துவ கல்லூரிக்கு திருப்பி விடப்பட்டது. அங்கே அவர்கள் அனைவரது சளி, மாதிரி எடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அனைவரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
பரிசோதனைக்குப் பின் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுவார்கள் என்றும், இல்லையெனில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தனிமையில் இருக்க அறிவுறுத்த படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.