இன்று எனது வீட்டை இடித்துள்ளீர்கள். ஆனால் நாளை உங்களது ஆணவம் நொறுங்கப் போகிறது. மக்கள் ஆதரவோடு நான் உள்ளேன் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
மும்பை பாலி பகுதியில் உள்ள கங்கனா ரனாவத் வீடு சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளது என மாநகராட்சி ஊழியர்களால் அவரது அலுவலகத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுளளது.
அதன் காட்சிகளை பதிவிட்டுள்ள கங்கனா ஜனநாயக படுகொலை “#DeathofDemocracy” என்ற ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டு அது தொடர்பான கங்கனா வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இதுகுறித்து, கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வழியாக கூறியதாவது, “உத்தவ் தாக்கரே எனது கட்டிடத்தை இடித்ததன் மூலம் என்னை பழிவாங்கியதாகவே இருக்கும் என நான் நினைக்கிறேன்.
காலம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். அப்போது உங்களின் நிலையும் மாறும். இன்று எனது வீட்டை நீங்கள் இடிக்கலாம். நாளை உங்களது ஆட்சி கவிழலாம். எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது.
உத்தவ் தாக்கரே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இன்று எனது வீட்டை இடித்து விட்டீர்கள். நான் உறுதியளிக்கிறேன், நான் அயோத்தியா மட்டுமல்லாமல் காஷ்மீர் பண்டிட்டுகள் பற்றியும் படம் எடுப்பேன். அவர்களின் வலியைத்தான் நானும் அனுபவித்து வருகிறேன்” என்றார்.
மும்பையில் தனது உயிருக்கு ஆபத்து என கூறியதால் கங்கனாவுக்கு மத்திய ரிசர்வ் காவல் படையினரின் Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு வீடியோவை கங்கனா வெளியிட்டுள்ளார்.
அதில், “கட்டத்தை இடிக்க வேண்டாம் என மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நான் எப்போதும் தப்பு செய்ய மாட்டேன்.
அவர்களே எனது எதிரிகளாக நிரூபித்து விட்டார்கள். இதனால்தான் எனது மும்பை தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக மாறியுள்ளது” என தெரிவித்த கங்கனா மற்றொரு ட்வீட்டில் கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க ஆயத்தமான புகைப்படத்தை போட்டு பாகிஸ்தான் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.