ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ச்சியாக ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துணைத்தலைவர் சுமதி, புதியம்புதுர் ஊரைச் சேர்ந்த கதிரேசன், செந்தில்குமார் உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்கள். தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை பொது மக்கள் போராட்டத்தினால் கடந்த 2018 ஆம் வருடத்தில் மூடப்பட்டது. தமிழகத்தில் நோய்த்தொற்று இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அதன் காரணமாக, ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்காக உச்சநீதிமன்ற அனுமதியின் பெயரில் ஸ்டெர்லைட் ஆலை மறுபடியும் திறக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதி ஆனது ஜூலை மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த சூழலில் நோய்தொற்று மூன்றாவது அலை ஏற்பட்டால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படக்கூடாது. இதன் காரணமாக, தொடர்ச்சியாக ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கவும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ச்சியாக செயல்படுவதற்கு அனுமதி வழங்க தெரிவித்து ஜூலை மாதம் 27 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை முன்பு ஒருசிலர் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து நோய்தொற்று காலத்தில் விதிமுறைகளை மீறி ஒரே சமயத்தில் கூட்டமாக கூடியதற்காக அவர்கள் மீது சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தான் அவர்கள் ஒன்று கூடினார்கள். இதன் காரணமாக இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்றைய தினம் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராட்டம் செய்தவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் மனு குறித்து சிப்காட் காவல் துறையினர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் மாதம் 22ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.