சென்னை உட்பட 5 நகரங்களில் கொரோனா மூன்றாம் அலை பரவும் ஆபத்து!

Photo of author

By Mithra

சென்னை உட்பட ஐந்து மெட்ரோ நகரங்களில் கொரோனா மூன்றாவது அலை பரவும் ஆபத்து உள்ளதாக, பொது நலவாழ்வு அறக்கட்டளை தலைவர் ஸ்ரீநாத் ரெட்டி எச்சரித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்திருந்தாலும் கூட, மூன்றாவது அலை அக்டோபர் மாத வாக்கில் வரும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம்… தடுப்பூசி போடும் பணி மந்தகதியில் நடப்பதால், கொரோனா அச்சுறுத்தல் முற்றிலும் குறையவில்லை என்று பொது நலவாழ்வு அறக்கட்டளையின் தலைவரும், மருத்துவ வல்லுநருமான கே.ஸ்ரீநாத் ரெட்டி கூறியுள்ளார். தடுப்பூசி போடும் வேகம் போதாது என்றும், ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனாவின் மூன்றாவது அலை… டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இருந்து தொடங்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. கொரோனாவின் உருமாறிய டெல்டா பிளஸ் தொற்று பரவல், மெட்ரோ நகரங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தத் தொற்று எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கொரோனாவின் மூன்றாவது அலை அக்டோபர்- நவம்பர் மாதத்தில் வர வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் முதல் கொரோனாவின் அச்சுறுத்தல் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வின் மூலமே மூன்றாவது அலையை தடுக்க முடியும். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் தொற்று வேகமாக பரவியது… முதல் மற்றும் இரண்டாவது அலைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, தடுப்பூசி போடும் வேகத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவ வல்லுநர் ஸ்ரீநாத் ரெட்டி கூறியுள்ளார்.

இதனிடையே, கேரளாவில் ஜிகா (Zika) வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் கொசுக்களால் பரவக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கும் வந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மேலும் 15 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில்… ஜிகா வைரஸ் குறித்து தமிழ்நாடு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என, நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.