உலகக் கோப்பை கிரிக்கெட் 2023! சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்!
நடப்பாண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் 2023ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட பாகிஸ்தான் அணி சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்திற்கான ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே மூன்று முறை இந்தியா மற்ற நாடுகளுடன் சேர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியுள்ளது. இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதுமாக இந்தியாவில் நடக்கவுள்ளது. நடக்கவிருக்கும் 13வது உலகக் கோப்பை தொடர் 2023ம் ஆண்டு அதாவது இந்த வருடம் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி முடிவடையவுள்ளது.
10 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடப்பதால் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்தது. தற்போது மீண்டும் இந்தியாவில் நடக்க விருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இது குறித்த அறிவிப்பை அனுப்பியுள்ளது. இதனால் நடப்பாண்டு இந்தியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 100 சதவீதம் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் நடக்கவிருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வந்தால்தான் நாங்கள் உலகக் கோப்பை தொடரில் விளையாட இந்தியாவிற்கு வருவோம் என்று பாகிஸ்தான் அணி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.