டெல்டா மாவட்டங்களில் மழையின் காரணமாக, ஏற்பட்டிருக்கக் கூடிய பயிர் செய்த பாதிப்பை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்கு தனி குழுவை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட இந்த குழுவில் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், பெரியகருப்பன், உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த குழுவை சார்ந்தவர்கள் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருக்கிறார். தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள், சிறப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்து இருக்கின்ற முதலமைச்சர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கக்கூடிய பொது மக்களுக்கு உணவு, நிவாரண உதவிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். வடகிழக்கு பருவமழையின் காரணமாக, கன மழை பெய்து வருவதால் முதல் அமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை ஒன்றை நிகழ்த்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எம்ஆர்கே பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு, மக்களை தங்க வைத்தல், நிவாரண உதவிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையே இன்று மாலை கடலூர் செல்லும் முதலமைச்சர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.