திருச்சியில் கட்டுக்கட்டாக கரன்சி! விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்!
திருச்சி விமான நிலையத்தில் கட்டு கட்டாக 46 லட்ச மதிப்பிலான வெளிநாட்டு பணம் சிக்கிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து தங்கம் பணம் போன்றவற்றை கடத்துவதை தவிர்க்க சுங்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றுவதும் தொடர்கதையான ஒன்று. இந்நிலையில் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் முறையான அனுமதி இன்றி வெளிநாட்டிற்கு பணம் கடத்துவது அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வது என அடுத்தடுத்த சம்பவங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1:30 மணி அளவில் திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து துபாய் நோக்கி செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இதையடுத்து விமானத்தில் பயணம் செய்யப்போகும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த சதாம் உசேன் 46 என்பவர் தனது உடைமையில் வைத்து கடத்த இருந்த 53 ஆயிரத்து 133 யூரோவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு இந்திய அளவில் ரூபாய் 46 லட்சம் ஆகும். மேலும் தொடர்ந்து சதாம் உசேன் இடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.