சிக்கனில் எலும்பு இல்லை… சப்ளையரை அறைந்த வாடிக்கையாளர்!

Photo of author

By Parthipan K

ஹோட்டலில் வாங்கிய பார்சல் சிக்கனில் எலும்பு இல்லாததால், வாடிக்கையாளர் ஒருவர் சப்ளையரை அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் பார்சலில் சிக்கன் வாங்கிச் சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்று சிக்கனை சாப்பிட்டபோது, அந்த கறியில் எலும்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடும் கோபமடைந்த கார்த்தி தனது நண்பருடன் ஹோட்டலுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடையில் சப்ளை செய்து கொண்டிருந்த ஊழியர் சாகுல் ஹமீது என்பவரின் கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார். இதில் சாகுல் நிலைகுழைந்து போனார்.

இதையடுத்து, ஹோட்டலில் இருந்தவர்கள் கார்த்தியை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். தற்போது சாகுல் ஹமீதுக்கு காது பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கார்த்தியை தேடி வருகின்றனர்.

மேலும், ஹோட்டலில் நடந்த அனைத்து சம்பவங்களும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.