ஆஸி வீரர்கள் நாட்டுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்… ஆனால் பூம்ரா?- பாக் வீரரின் கருத்து!
இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளரான பூம்ரா இல்லாமல் ஆசியக் கோப்பை மற்றும் டி 20 உலகக்கோப்பை தொடர் ஆகியவற்றில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.
விரைவில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி பூம்ரா இல்லாமல் விளையாட உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார்.
ஆஸி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர் மீண்டும் காயம் ஏற்பட தற்போது உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். அவருக்கு பதில் கடந்த ஒரு ஆண்டாக டி 20 போட்டிகளே விளையாடாத ஷமி அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
கண்டிப்பாக பூம்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னால் சுழல்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலிய வீரர்களையும் இந்திய வீரர்களையும் ஒப்பிட்டு பேசியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் அவர் “ஆஸ்திரேலியாவின் முக்கிய பந்துவீச்சாளரான ஸ்டார்க் தேசிய அணிக்காக விளையாட ஐபிஎல் மற்றும் பிக்பாஷ் போன்ற லீக் தொடர்களை தவிர்த்துவிட்டு, இப்போது உலகக்கோப்பைக்கு தயாராக இருக்கிறார். இதுபோல இந்தியாவின் முக்கிய வீரர்களும் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளை தவிர்த்துவிட்டு, இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.