சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் அவருக்கு கை கொடுத்த தில்லுக்கு துட்டு போன்ற ஹாரர் காமெடி படங்கள்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கிய ராம் பாலாதான் தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 போன்ற படங்களை இயக்கினார்.
இந்த இரண்டு படங்களுமே ஹிட். இதைத்தொடர்ந்து பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார். பேய்கள் கொடுக்கும் கேமை சரியாக விளையாடி முடிக்க வேண்டும் என்கிற கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து ஹாரர் கலந்த காமெடி படமாக இப்படத்தை உருவாக்கியிருந்தனர். இந்த படமும் ஹிட்.
இப்போது அதே இயக்குனரின் இயக்கத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன், கவுதம் மேனன், கிங்ஸ்லி, கீத்திகா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சந்தானத்தின் நண்பர் ஆர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படமும் பக்கா ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ளது. காக்க காக்க படத்தில் சூர்யா போல், கவுதம் மேனனும் உயிரின் உயிரே பாடலுக்கு நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். இந்த படத்தில் புதிய திரைப்படங்களை யுடியூப்பில் விமர்சனம் செய்பவராக சந்தானம் நடித்திருக்கிறார். அவரின் ரிவ்யூவை பார்த்து கோபப்படும் ஒரு பேய் சந்தானத்தை ஒரு சினிமாவுக்குள் தள்ளிவிடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் கதை. இப்படம் வருகிற மே 16ம் தேதி ரிலீஸாகவுள்ளது.