கள்ளக்குறிச்சி அருகே 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், இது தொடர்பாக மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் அந்த பகுதி மக்களுடன் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதுடன் அங்கிருந்த பேருந்துகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவைகள் தீ வைத்து எரிக்கப்பட்டனர். இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப் போராட்டம் காரணமாக, அந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நீடித்து வருவதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கலவரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த இருக்கிறது. என் சி பி சி ஆர் தலைவர் பிரியங்க் கானுன்கோ தலைமையிலான குழு வருகின்ற 27ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் ஆய்வு நடத்தவிருக்கிறது.