முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்திய டாக்டரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர், கிழக்கு வீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ரேவதி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று டாக்டர் ரேவதி நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது முககவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் பெண் ஒருவர் உள்ளே வந்தார். அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதுகுறித்து பார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அவரிடம் டாக்டர் ரேவதி விசாரித்தபோது திருக்கோவிலூர் சந்தப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயந்தி என்று கூறினார். அப்போது டாக்டர் ரேவதி ஜெயந்தியிடம், தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால், நோய் தொற்று பரவாமல் இருக்க முக கவசம் அணிந்து வருமாறும் அப்படி வருபவர்களுக்கு தான் இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த ஜெயந்தி, டாக்டர் ரேவதியை ஆபாசமாக திட்டி கையால் அவரை தாக்கியதோடு அங்கிருந்த பொருட்களை எல்லா உடைத்து சேதப்படுத்தி உள்ளார். மேலும், டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கண்டு மிரண்டுபோன டாக்டர் ரேவதி, திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் ஜெயந்தி மீது புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் தாஸ், ஜெயந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
முகக் கவசம் அணிவதால் நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று அரசு அறிவுறுத்துகிறது. இதனை எடுத்து கூறிய டாக்டர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளார் ஒரு பெண்மணி. இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.