மதுவுக்கு 70% வரி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
கொரோனா காரணமாக மார்ச் 21ம் தேதி முதல் ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.
இதனையடுத்து சுமார் 45 நாட்களுக்குப் பின்னர் சிலமாநில அரசுகள் மது கடைகளைத் திறப்பதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக மதுபானக் கடைகள் நேற்று திறக்கப்பட அதில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொரோனா பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்த போதும் மது ஆர்வலர்கள் மதுபாட்டிலை வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே இருந்ததால் பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது.
இதனால் டெல்லியில் மதுக்கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. இது தொடர்பாக ஆலோசனையை மேற்கொண்ட டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் ஓர் அதிரடி முடிவை எடுத்தார். அதன் படி டெல்லியில் விற்கப்படும் விலையிலிருந்து 70% வரி விதிக்கப்பட்டுள்ளது. உதாரணதிற்கு ஒரு பாட்டிலின் விலை 100 ரூபாய் என்றால் அதற்கு 70 ரூபாய் வரி விதிக்கப்பட்டு 170 ரூபாய் வசூல் செய்யப்படும்.
இது குறுத்து வீடியோ கான்ஃபரின்சிங் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “தேசிய தலைநகரில் உள்ள மதுபானக் கடைகளில் சமூக இடைவெளி விதிமுறைகளில் குழப்பம் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. சமூக இடைவெளி மற்றும் பிற விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அந்த பகுதிகளுக்கு சீல் வைக்கப்படும் மற்றும் தளர்வுகள் ரத்து செய்யப்படும். நாம் அனைவரும் பொறுப்புள்ள குடிமக்களைப் போல நடந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரசை தோற்கடிப்பதற்கு, முககவசங்களை அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், அடிக்கடி கையை சுத்தப்படுத்த வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
கெஜ்ரிவாலின் இந்த முடிவால் மதுக்கடைகளில் கூட்ட நெரிசல் குறையும் என்று கூறப்படுகிறது. அவரது இந்த முடிவை மற்ற மாநிலங்களும் பின்பற்றலாமே என்ற கோரிக்கை வலுக்கிறது.