இந்தியா முழுவதும் பரவும் டெல்லி போலீஸ் போராட்டம்: பரபரப்பு தகவல்
டெல்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் சமீபத்தில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே நடைபெற்ற மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதலை அடுத்து நேற்று வழக்கறிஞர்கள் தங்களுடைய உரிமைக்காக போராடிய நிலையில், இன்று காலை திடீரென போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் முதன்முதலாக போலீசார் போராட்டம் நடத்துவதால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்தன. மேலும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போலீஸ் உயரதிகாரிகள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது
இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு போலீசாரின் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் போராட்டத்தில் குதித்ததால் போராட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகிறது. போலீசார் குடும்பங்களும் அவர்களுடைய உறவினர்களும் வீதியில் இறங்கி பதாதைகளை ஏந்தி ஊர்வலம் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
அது மட்டுமின்றி டெல்லி போலீசாருக்கு ஆதரவாக மற்ற மாநிலங்களில் உள்ள போலீசார் போராட்டத்தில் குதிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி வருகிறது. குறிப்பாக ஹரியானா, பீகார், தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் உள்ள போலீசார் போராட்டத்தில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த போராட்டம் இந்திய அளவில் பரவினால் பெரும் பதற்ற நிலை ஏற்படும் என்றும் சட்டம் ஒழுங்கில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் மத்திய மாநில அரசுகள் கருதுவதால் உடனடியாக இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர டெல்லி அரசும் மத்திய அரசும் தீவிரமாக முயற்சித்து வருகிறது
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் ஒரு சில மணி நேரத்தில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் என கருதப்படுகிறது