களத்தில் மாணவர்கள் !!! சிக்கலில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா ???

Photo of author

By Parthipan K

கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் தலைப்பு செய்தாக இருப்பது குடியுரிமை சட்ட திருத்த மசோதா. இந்திய அரசின் இரு நாடாளுமன்ற அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குடியுரிமை திருத்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமண மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை

இந்த சட்டத்தால் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் அடையாளம், கலாச்சாரம், பாரம்பரியத்தை இழந்துவிடுவோம், எனக் கூறி போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதம் அடைந்தது. இதில்  போலீஸ் காரர்களும் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதில் பலர் பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அமைதியாக போராட்டம் நடத்திய தங்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, வன்முறைக்கு வித்திட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், “டெல்லியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுமாறு துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளேன். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர எங்களால் முடிந்த  அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்