நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் நடந்தது போல நிஜத்தில் நடந்துள்ள சம்பவம் மக்களை ஆச்சர்யத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
நண்பன் படத்தில், பிரசவ வலியால் துடிக்கும் ஒரு பெண்ணுக்கு, பிரசவம் பார்க்க டாக்டராக நடித்து இருக்கும் நடிகை இலியானா வீடியோ கால் மூலம் விஜய்க்கு சில அறிவுரைகளை வழங்குவார். அதுபோல விஜயும், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து இருப்பார்.
அதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தை தடுக்கும் வகையில் தொடர்ந்து ஐந்து ஞாயிற்றுக்கிழமையும் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. ஹாவேரி மாவட்டம் ஹனகல் டவுன் பகுதியை சேர்ந்தவர் வாசவி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் அங்கு வந்தனர். ஊரடங்கின் காரணமாக எந்த ஒரு வாகனமும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முன்வராததால் அனைவரும் என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்றனர்.
அப்போதுதான் வாசவியின் உறவுக்கார பெண் ஒருவர் உப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றிவரும் பிரியங்கா மண்டகியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அங்கு இருக்கும் நிலவரத்தை அவருக்கு அனைவரும் எடுத்து வைத்தனர்.
உடனடியாக பிரியங்கா தனக்கு வீடியோ கால் செய்யும்படி அங்கிருந்தவர்களிடம் கூறினார். அவரின் அறிவுரையோடு வீடியோ காலிங் மூலம் வாசவிக்கு அவரது உறவுக்கார பெண்களான மதுலிகா தேசாய், அங்கிதா, ஜோதி, விஜயலட்சுமி, மாதுரி, முக்தா, சிவலீலா ஆகியோர் பிரசவம் பார்த்தனர்.
இதில் வாசவிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். உறவினர்கள் வீடியோ காலிங் மூலம் பிரியங்காவுக்கு குழந்தையை காண்பித்தனர். இதனை தொடர்ந்து வாசவியும் அவரது உறவினர்களும் மருத்துவருக்கு கண்ணீர்மல்க நன்றி கூறினார்.
இதையடுத்து திங்கட்கிழமை அன்று காலை வாசவியும், அவரது குழந்தையும் ஹனகல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.