ஞாயிற்று கிழமை அன்று தபால் துறை தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.
கடந்த காலத்தில் தமிழ் மொழியில் நடத்தப்பட்ட இந்த தேர்வு, இந்த முறை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டதால், தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தது.
இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்யவேண்டும் என தமிழக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் நாடாளுமன்ற அவை நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவை கூடியதும், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், எழுந்து இந்த தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும் இனிமேல் தபால் துறையில் நடத்தப்படும் தேர்வுகள் அந்ததந்த மாநில மொழிகளிலே நடத்தலாம் என ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.