ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்!
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு இது நாள் வரை 14 சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பியும், அவற்றில் ஒன்றுக்கு கூட ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி அரசையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் அவமான படுத்தி வருகிறார் என எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் நேற்று மத்திய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிவரும் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி கூறிய கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஆளுநரின் இந்த கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பு குரலை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில் ஆளும் அரசாக உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து வருகிற 12ம் தேதி மாலை நான்கு மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது, ஆளுநர் ஆர் என் ரவியின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. சட்டமன்ற மாண்பை குலைக்கும் தனது நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை போராட்டம் ஓயாது என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நாளை தமிழகம் வரும் நிலையில் ஆளும் தரப்பிற்கும், ஆளுநருக்கும் இடையேயான பிரச்சனை குறித்து பேசப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.