வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

0
251

வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதன்காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத்
தாழ்வுப்பகுதி அவ்வப்போது உருவாகி மறைந்து வருகிறது. ஏற்கெனவே, 5 காற்றழுத்தத்தாழ்வுப்பகுதிகள் உருவாகி, வடமேற்கு திசையில் நகா்ந்து மறைந்தன. அண்மையில், வங்கக்கடலில் ஒரு காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாகி மறைந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடலில் கடந்த சனிக்கிழமை குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு
மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், மேற்குதொடா்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து, சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் பலத்தமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதி, வடக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செப்டம்பா் 14-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

Previous articleஇன்று நீட் தேர்வு – தமிழகத்தில் 1,10,971 பேர் எழுதுகின்றனர்!
Next articleரயில் பெட்டிகள் குத்தகை : இந்திய ரயில்வே திட்டம்!