திருமாவுக்கு துணை முதல்வரா? திமுக கூட்டணியில் எழுந்த அடுத்த சிக்கல்
ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்து ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.அதே போல சமீபத்தில் பாஜக தலைமை தான் தமிழகத்திற்கு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று அடுத்த அதிரடியை காட்டினார்கள்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் கேட்பது போல திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியும் ஆட்சியில் பங்கு கேட்பதாக நமது தளத்தில் சில தினங்களுக்கு முன்பு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.இதனை உறுதி செய்யும் விதமாக தான் தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளது.இதில் அடுத்த கட்டமாக ஆட்சியில் பங்கு என்பதை தொடர்ந்து திருமாவளவனுக்கு துணை முதல்வர் வேண்டும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
அதாவது விரைவில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது.இதற்காக திமுக மற்றும் அதிமுக என இரு தரப்பினரும் தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்கள். ஆனால் இந்த இரு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற எந்த கட்சிகளும் திமுக,அதிமுக கட்சிகளுக்கு ஆதரவாக தற்போது வரை பிரச்சாரம் செய்ய ஆரம்பிக்கவில்லை.இதற்கு காரணமாக கூட்டணி கட்சிகள் கேட்கும் நிபந்தனைகளுக்கு திமுக மற்றும் அதிமுக கட்சிகள் செவி கொடுக்காமல் தவிர்த்து வருவது தான் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போதைய சூழலில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவில் முக்கிய தலைவர்கள் இல்லாத காரணத்தால் தனித்து போட்டியிட்டால் ஆட்சியை பிடிப்பது கடினம் என்பதை உணர்ந்து திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு அதிகமான தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வேண்டும் என்றும்,துணை முதல்வர் பதவி அல்லது ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்றும் தொடர் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.
இதில் குறிப்பாக ஆளும் கட்சியான அதிமுகவின் கூட்டணியில் உள்ள பாமக தான் இந்த கோரிக்கையை முதலில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.அதற்கு காரணமாக நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வட மாவட்டங்களில் பாமகவின் வாக்கு வங்கியால் தான் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடிந்தது என்ற காரணத்தையும் கூறுகின்றனர். பாமகவை போலவே அதிமுகவின் கூட்டணியில் உள்ள பிஜேபி கட்சியும் ஆட்சியில் பங்கு கேட்பதாக சொல்லப்படுகிறது.
அதே போல் பாமகவை விட தங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என்று பாஜகவும்,பாஜகவை விட தங்களுக்கு அதிக தொகுதிகளையும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடும் தர வேண்டும் என்று பாமக தரப்பும் கோரிக்கைகளை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இதே போல் அதிமுகவின் கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான தேமுதிக தங்களுக்கு 60 தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.அவ்வாறு இல்லையென்றால் கூட்டணியை விட்டு வெளியேறி மூன்றாவது அணி அமைப்போம் என்றும் அவர்கள் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறாக ஆளும் அதிமுகவின் கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களது கோரிக்கைகளை வைக்க அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி தரப்பு குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அதிமுக தரப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு அதிகமான தொகுதிகளை கேட்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.குறிப்பாக காங்கிரஸ் கட்சி வழக்கத்தை விட அதிக தொகுதிகளை கேட்பதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியானது சொந்த சின்னத்தில் போட்டியிடவும், தங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் திமுகவை அவர்களது ஆதரவாளர்கள் மூலம் வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் விசிகவின் ஆதரவாளரான செங்கொடி என்பவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.அவர் பதிவிட்டுள்ளதில்,”கோட்டையில் முடிவு எடுக்கும் சக்தியாக விசிக வலிமை பெரும்” என்று பதிவிட்டுள்ளார்.இதனால் திமுக தலைமைக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வரவுள்ள தேர்தலில் விசிகவுக்கு அதிகமான சீட் தரவில்லை அல்லது ஆட்சியில் பங்கு என்ற உத்தரவை தரவில்லை என்றால் 2016 சட்டமன்ற தேர்தல் போல் மூன்றாவது அணி அமைப்போம் என்றும் அக்கட்சி திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆட்சியில் பங்கு என்பதுடன் தமிழகத்தின் 3 வது பெரிய கட்சியின் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆக கூடாதா? என்று விசிக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து அக்கட்சியின் ஆதரவாளரான செங்கொடி என்பவர் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது.
திச 30 :#தமிழகத்தின் 3 ஆவது பெரிய கட்சி #விடுதலைச்சிறுத்தைகள்கட்சி..
#துணைமுதல்வராகக்கூடாதா #தலைவர் #திருமாஆட்சியில் பங்கு கேட்கும் #விசிக! உடைகிறதா #திமுக கூட்டணி? கலக்கத்தில் #அறிவாலயம்https://t.co/4CSwVY2gD4
Source : "News4Tamil" via Dailyhunthttps://t.co/Qi9F2vNH6P pic.twitter.com/wqsAauvvnC— Senkodi Balakrishnan @SenkodiOfficial (@senkodiwww) December 30, 2020
அவருடைய இந்த பதிவிற்கு “எதற்கு துணை முதல்வர் நேரிடையாக பிரதமர் பதவியை கேட்கலாமே” என்று நெட்டிசன்கள் கிண்டலாக பதிலளித்து வருகின்றனர்.அதே போல 1 சதவீதத்தை கூட வாங்காத விசிக மூன்றாவது கட்சியா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விசிக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று திமுக தலைமை எண்ணினாலும்,அதிமுக கூட்டணியில் எழுந்துள்ளது போல திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் ஆட்சியில் பங்கு கேட்டால் எப்படி சமாளிப்பது? கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியுமா? என்றெல்லாம் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகள் கேட்கிறதோ இல்லையோ திமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் யாராவது துணை முதல்வர் பதவியை கேட்டு விடுவார்களோ என்ற அச்சமும் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தேர்தல் நெருங்க வலிமையான கூட்டணி என்று சொல்லிக் கொண்ட திமுகவிற்கும் சிக்கல் ஆரம்பித்துள்ளது என்றே கருதப்படுகிறது.