சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் வரும் 27ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 3 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மைசூா், மங்களூா் ஆகிய இடங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூா் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 2 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 25) காலை 8 மணி முதல் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்களின் விவரங்கள்:
- சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் வரும் 27ம் தேதி இரவு 7.45 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். அதேபோல் திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரலுக்கு, 28ம் தேதி மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்னை வந்தடையும்.
- சென்னை சென்டிரல்-மங்களூரு சிறப்பு ரயில் வரும் 27ம் தேதி இரவு 8.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.10 மணிக்கு மங்களூரு சென்றடையும். அதேபோல் மங்களூரு – சென்னை சென்ட்ரலுக்கு, 28ம் தேதி மதியம் 1.30 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.35 மணிக்கு சென்னை வந்தடையும்.
பயணிகள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். ரயில் நிலையத்தில் நுழைவுவாயிலில் பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதால் பயணிகள் அனைவரும் குறைந்தபட்சம் 90 நிமிடங்கள் முன்னதாகவே ரயில் நிலையத்திற்கு வர வேண்டும் என்று தெற்கு ரயில்வே தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.