அவதியில் பக்தர்கள் ! ஆக்கிரமிப்பில் சண்முகா நதி! நடவடிக்கை எடுக்கப்படுமா?
பழனி சண்முகா நதி ஆறானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோவிலில் முதன்மையானது பழனி முருகன் கோவில். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிவர். அவர்கள் பழனியில் புனித நதியாக கருதப்படும் ஷண்முகா நதியில் நீராடுவது வழக்கம்.
பக்தர்களின் வசதிக்காக சண்முகா நதி கரையில் முடி காணிக்கை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச குளியல் அறை ஷவர் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முடி காணிக்கை செலுத்த இந்த நிலையத்திற்கு செல்லும் பக்தர்கள் செல்ல முடியாதபடி வழி எங்கும் ஏராளமான கடைகள் சண்முகா நதி கரையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பக்தர்கள் நடந்து செல்ல முடியாதபடி ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. சிறு சிறு கொட்டைகளாக இருக்கும் இந்த கடைகளில் பக்தர்கள் குளிப்பதற்கு உதவும் சோப்பு, ஷாம்பு, சீயக்காய், ஆகியன விற்கப்படுகின்றன.
மேலும் பக்தர்கள் வெந்நீரில் குளிப்பதற்கு கட்டண வசதியுடன் கூடிய குளியல் அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நதியில் நீராட வரும் பக்தர்களை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் அங்கும் இங்கும் அலை கழிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
நாளை ஜனவரி 29ஆம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட உள்ளது. எனவே கோவில் நிர்வாகம், பொதுப்பணித்துறையுடன் இணைந்து ஆக்கிரமிப்பு பகுதிகளை தைப்பூச திருவிழா காலம் துவங்குவதற்குள் அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கைகளாக உள்ளது.