உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார். மேலும் இது போன்ற இக்கட்டான நேரத்தில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும், அப்போதுதான் நாம் கொடிய வைரஸுக்கு எதிரான போரில் வெல்ல முடியும் என்று கூறினார்.
முன்னதாக முதல்வர் பழனிசாமி அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். இவ்வாறான நெருக்கடியான சூழலில் வாகனங்கள் கிடைக்காத காரணத்தால் விலை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்டத்தில் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்ல வாகனம் கிடைக்காததால் விவசாயி ஒருவர் தானே வண்டி வைத்து கொண்டு செல்ல முயன்றுள்ளார். இந்த விவசாயி அனுமதி பெறாததால் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளார், இதனால் விரக்தியில் காய்கறிகளை சாலையில் வீசி சென்றுள்ளார்.
இதனை கேட்டு தெரிந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்த் ஐ.பி.எஸ் பாதிப்புக்குள்ளான விவசாயியின் வீட்டிற்கு தேடி சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்கி ஆறுதல் கூறியுள்ளார்.
இந்த விவசாயியை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி அரவிந்த் ஐ.பி.எஸ் கூறி நம்பிக்கை அளித்துள்ளார். இந்த நடவடிக்கையால் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.