டி 20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்… பிசிசிஐ அதிகாரி ஒருவரின் லேட்டஸ்ட் அப்டேட்!
தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணியில் தோனிக்கு முன்பே விளையாட ஆரம்பித்தாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் சில போட்டிகள் விளையாடுவதும் பின்னர் நீக்கப்படுவதும் என இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக கூட செயல்பட்டார்.
2022 ஆம் ஆண்டில் ஒரு ஐபிஎல் தொடரின் மூலமாக, தினேஷ் கார்த்திக் அற்புதமான திருப்புமுனையைப் பெற்றுள்ளார். RCB அணிக்காக பின் வரிசையில் சிறப்பான பேட்டிங் செய்ததன் மூலம் மீண்டும் தேசிய அணிக்கு திரும்பினார். இதையடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி டி 20 போட்டிகளில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் சிறப்பாக விளையாடி 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக் இந்த் ஆண்டு இறுதியில் நடக்கும் டி 20 உலகக்கோப்பையில் விளையாடுவது உறுதி என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் “இனிமேல் யாராலும் அவர் இடத்தை நிராகரிக்க முடியாது” எனவும் கூறியுள்ளார்.