“இந்திய கிரிக்கெட் பற்றி எதுவும் பேசக்கூடாது…” தினேஷ் கார்த்திக்கு பிசிசிஐ அறிவுரை!
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் சமீபத்தில் மீண்டும் இந்திய டி 20 அணியில் இடம்பிடித்தார்.
இந்திய அணியில் தோனிக்கு முன்பே விளையாட ஆரம்பித்தாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் சில போட்டிகள் விளையாடுவதும் பின்னர் நீக்கப்படுவதும் என இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக கூட செயல்பட்டார்.
2022 ஆம் ஆண்டில் ஒரு ஐபிஎல் தொடரின் மூலமாக, தினேஷ் கார்த்திக் அற்புதமான திருப்புமுனையைப் பெற்றுள்ளார். RCB அணிக்காக பின் வரிசையில் சிறப்பான பேட்டிங் செய்ததன் மூலம் மீண்டும் தேசிய அணிக்கு திரும்பினார்,
ஐபிஎல் 2022ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்காக மேட்ச் ஃபினிஷராக விளையாடிய கார்த்திக், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அந்த தொடரில் தனது தேர்வை நியாயமாக்கும் வகையில் சிறப்பாக விளையாடினார். இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி 20 உலகக்கோப்பையில் அவர் இடம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதே போல அடுத்த ஆண்டு நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையிலும் விளையாடுவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர் “டி20 பணிக்காக வெஸ்ட் இண்டீஸ் செல்லும் வரை, இந்திய கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவிக்க அனுமதி இல்லை” என்று பதிலளித்தார். மேலும் “நான் மேற்கிந்தியத் தீவுகளை அடையும் வரை இந்திய கிரிக்கெட்டில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னிக்கவும்” என்று கூறியுள்ளார்.