குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள்! தமிழக காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த டிஜிபி சைலேந்திரபாபு!

Photo of author

By Sakthi

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள் வந்த அரைமணி நேரத்தில் அந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் துறையை சார்ந்த இன்ஸ்பெக்டர்கள் நேரடி விசாரணையில் இறங்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் குறித்து புகார்கள் வந்த அரைமணி நேரத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் நேரடியாக சென்று விசாரணை நடத்த வேண்டும், உடனடியாக சி எஸ் ஆர் ரசீதுகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்களால் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு நடைபெற்றிருந்தால் அது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளை உரிய பாதுகாப்பாக வைக்க வேண்டும். தொல்லை கொடுத்த குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து குழந்தையை மீட்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் சைலேந்திரபாபு.

பாதிக்கப்பட்ட குழந்தை விரும்பும் இடத்திற்கு சென்று விசாரணை அதிகாரி விசாரணை செய்ய வேண்டும் விசாரணை நடத்த செல்லும்போது காவல்துறை சீருடையில் செல்லக்கூடாது. சாதாரண உடையில் சென்று தான் விசாரணை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு அந்த அறிக்கையின் நகல் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் வழங்கப்படவேண்டும். குற்றம் தொடர்பான தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் பாக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும் போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அந்த குற்றப்பத்திரிகை நகலை காண்பித்து அவருடைய ஒப்புதலைப் பெறவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் டிஜிபி சைலேந்திரபாபு குறிப்பிட்டிருக்கிறார்.