நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் பல நடிகர்களுக்குமே கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. அப்படி கோபப்படும் எல்லா நடிகர்களுமே திமுக ஆதரவாளர்கள் என்பது முக்கிய காரணம். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கியுள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வாங்கி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என விரும்புகிறார்.
குறிப்பாக திமுகவின் அடுத்தகட்ட தலைவராக உதயநிதி முன்னிறுத்தப்படுவது விஜய்க்கு பிடிக்கவே இல்லை. தாத்தா, அப்பா, பேரன் என இவர்களே நாட்டை ஆளவேண்டுமே?.. இது என்ன மன்னராட்சியா?.. என்கிற கேள்வி அவரின் மனதில் இருக்கிறது. அதனால்தான் திமுகவை குடும்ப அரசியல் என தொடந்து விமர்சித்து வருகிறார். முதல்வர் ஸ்டாலினை குறிப்பிடும்போதும் ‘மன்னராட்சி முதல்வரே’ என்றுதான் பேசுகிறார்.
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே விஜயின் நோக்கமாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்திலும் திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து திமுகவினரும், திமுக ஆதரவு நடிகர்களும் விஜயை திட்ட துவங்கிவிட்டார்கள், நடிகர் போஸ் வெங்கட் கூட ஒரு மேடையில் விஜயை திட்டினார்.
கலைஞர் கருணாநிதி 14 வயதில் கதை எழுதி கொண்டிருந்தார். திமுக கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தார். அவரின் மகன் ஸ்டாலின் 14 வயதில் தனது அப்பா கலைஞர் இந்திரா காந்தி போன்ற தேசிய தலைவர்களிடம் அரசியல் பேசியதை பார்த்துகொண்டிருந்தார். ஆனால், ஜோசப் விஜயான நீங்கள் 14 வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?.. உங்கள் அப்பா சினிமாவுக்கு கதை எழுதி கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்திருப்பீர்கள்.. வாரிசு அரசியல் என சொல்கிறீர்களே.. நீங்கள் வாரிசு இல்லையா?.. உங்கள் அம்மா, மாமா, சின்னம்மா, தாத்தா, அப்பா என எல்லாமே சினிமாவை சேர்ந்தவர்கள்தானே. நீங்கள் சினிமா வாரிசு’ என பேசியிருந்தார்.
இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான கே.பாக்கியராஜ் விஜயை விமர்சித்திருக்கிறார். ’நீ எதையா குடும்ப அரசியல்னு சொல்ற?. சின்ன வயசுல இருந்து கழகத்துக்காக பாடுபட்டு சைக்கிளில் போய் ஊர் ஊரா சுத்தி கட்சிக்காக வேலை செய்து, எவ்வளவோ போராட்டங்களை செய்து 67 வயதில் முதல்வராக வருவதை குடும்ப அரசியல்னு வாய் கூசாமல் சொல்ற’ என விமர்சித்திருக்கிறார்.
பாக்கியராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அதிமுகவின் ஆதரவாளர். ஆனால், இப்போது திமுகவுக்கு ஆதரவாக அவர் பேசியிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.