மேல்பாதி திரௌபதி கோவிலுக்கு சென்ற இயக்குனர் கவுதமன் கைது
விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம் தொடர்பாக அந்த கிராம மக்களை சந்தித்த தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குனர் வ கவுதமன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் தாங்களும் வழிபட அனுமதி கேட்டுள்ளனர். வன்னியர் சமூகத்திற்கான குல தெய்வக் கோவிலாக பல ஆண்டுகளாக கடைபிடிக்கபட்டு வரும் நிலையில் இந்த கோவிலில் மாற்று சமூக மக்களுக்கு அனுமதி இல்லை என அம்மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் இந்த கோவில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த தனி நபர் பிரச்சனையால் தான் அங்குள்ள தலித் மக்கள் தங்களை கோவிலுக்குள் சென்று வழிபட மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர் என்றும் அந்த கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
அதற்கு அந்த கிராம மக்கள் இது அவர்களின் குல தெய்வக் கோவில் என்றும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லையென்றும், தனி நபர் பெயரில் தான் கோவில் உள்ளதாகவும் கூறி அனுமதி மறுத்தனர். இதனைத்தொடர்ந்து தலித் மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தனர்.
இந்நிலையில் அங்கிருந்த அமைச்சர் பொன்முடி நீங்க கோவிலுக்கு போங்க எவன் தடுக்கிறான் என நான் பார்த்துக்கிறேன் என பேசியது கோவிலுக்கு உரிமையானவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த பிரச்சினையில் அமைச்சர் பொன்முடி தலையிட்டதால் பிரச்சனை தீவிரமாகியது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இரு தரப்பு மக்களையும் பல கட்டங்களாக அழைத்து பேசியும் சமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அந்த கோவிலுக்குள் யாரும் செல்லாதவாறு 145 சட்ட விதியின் கீழ் சீல் வைத்தது.அந்தவகையில் வெளி ஆட்கள் யாரும் அந்த ஊருக்குள் செல்ல முடியாத சூழல் உருவானது.
இதனைத்தொடர்ந்து இரு தரப்பும் தங்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றனர். ஒட்டு மொத்த தமிழகமும் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பேரரசு கட்சியின் நிறுவனரும் இயக்குனருமான வ கவுதமன் அப்பகுதியிலுள்ள இரு தரப்பின் கருத்துக்களை அறிய அங்கு சென்றுள்ளார்.ஆனால் அவரை அங்கு விடாமல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.