திரௌபதி படத்திற்கு எதிராக களமிறங்கிய பிரபல யூட்யூப் சேனல் : உண்மையை வீடியோவுடன் வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குநர்!

Photo of author

By Parthipan K

சமீபத்தில் வெளியான திரௌபதி படம் பல சர்ச்சைகளுக்கு நடுவில் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. அதில் மிகவும் குறிப்பிடும்படியாக 300 தியேட்டர்களில் ஒரு வாரத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் திரௌபதி கிரவுட் ஃபண்டிங் முறையில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்பதாகும். இந்தப் படம் கடந்த ஒரு வாரத்தில் தயாரித்த செலவை விட 20 மடங்கு வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அந்த படத்தின் இயக்குனர் மோகன் சினிமா வட்டாரத்தில் பிரபலமடைந்துள்ளார்.

இந்த வெற்றியின் காரணமாக இயக்குனர் மோகன் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களின் நேர்காணல்களில் கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில் பிரபல சினிமா மீடியாவின் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அந்த இயக்குனர் நேர்காணல் வழங்கியிருந்தார்.

அந்த நேர்காணலில் சர்ச்சைக்குரிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு இயக்குனர் மோகன் விளக்கம் அளித்தும் அதை ஏற்க மறுப்பது போல் கேள்விகள் கேட்கப்பட்டன.

மேலும் அவர் பிரபல இயக்குனர் மற்றும் ஒரு அரசியல் தலைவரை தாக்கியே படம் எடுத்துள்ளதாகவும் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதோடு நிறுத்தாமல் வேறு ஒரு அரசியல் கட்சியை இயக்குனர் மோகனுடன் தொடர்புபடுத்தி கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்தக் கேள்விகள் வேண்டுமென்றே தன்னை தாக்கி கேட்கப்படுவதாக கூறி இயக்குனர் அந்தக் நேர்காணலிலேயே கூறியிருக்கிறார். இதற்கு மேல் இந்த நேர்காணல் தொடர்ந்தால் அது நன்றாக இருக்காது என்று நன்றி கூறிய இயக்குனர் மோகன் அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.

இதனை அந்த பிரபல மீடியா நிறுவனம் இயக்குனர் பாதியிலேயே வெளிநடப்பு செய்தது போன்று சில காட்சிகளை நீக்கிவிட்டு ஒளிபரப்பியுள்ளது. இதைப் பார்த்த இயக்குனர் தான் அங்கிருந்து வெளிநடப்பு செய்யவில்லை என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த செயலுக்கு அந்நிறுவனம் மன்னிப்பு கேட்கும் வரை தான் விடப்போவதில்லை என்று அதில் கூறியிருந்தார். இதற்கு அந்த மீடியா நிறுவனம் பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேராக சென்ற இயக்குனர் விளக்கம் தரும்படி கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நிறுவனம் அவர் நன்றி கூறி விடை பெற்ற காட்சிகள் பதிவாகவில்லை என்று மழுப்பலான பதில் அளித்தனர்.

அந்த வீடியோவில் அவர் வெளியேறி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது ஆனால் நன்றி கூறிய காட்சிகள் ஏன் பதிவாகவில்லை என்று நிகழ்ச்சியின் இயக்குனரிடம் கேட்டுள்ளார். இந்த நிகழ்வை தனது உதவியாளருடன் வீடியோவாக எடுத்த இயக்குநர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீயோவை சமூக வலைதளங்களில் பார்த்த நெட்டிசன்கள் அந்த மீடியா நிறுவனத்தின் மீது தங்கள் கோபத்தை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற நிறுவனங்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டிய திரௌபதி பட இயக்குனரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.