கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரத்தில் ஈவேரா சிலை மீது காவி வர்ணத்தை மர்ம நபர்கள் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஈவேரா சிலையில் காவி பெய்ண்ட் ஊற்றியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பாமக, திமுக, மதிமுக, விசிக ஆகிய கடைசியின் தலைமைகளும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பதிவு இட்டுள்ளார். அதில், தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் காவி ஊற்றி இழிவுபடுத்துவது வாடிக்கையாகி விட்டது. இந்துத்துவ பிற்போக்குத்தனத்தை எதிர்ப்போரை பொது சமூகத்திற்க்கு எதிரியாக மாற்றுதல், அழித்தொழித்தல் என தங்கள் வேலைத்திட்டத்தை மத உணர்வை தூண்டி செயல்படுத்திக்கொள்கிறார்கள்! விழிப்படைவோம்’ என்று கூறியுள்ளார்.
ஈவேரா சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட சம்பவத்தில் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தானாக சரணடைந்துள்ளார். இதற்கு முன்பு பல்வேறு இடங்களில் ஈவேராவின் சிலை தாக்கப்பட்டு தலைகள் துண்டிக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.