திரையில் வித்தியாசங்களை நிகழ்த்தும் இயக்குநர் வசந்த்!!

0
289
#image_title

திரையில் வித்தியாசங்களை நிகழ்த்தும் இயக்குநர் வசந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான வசந்த் அவர்களைப் பற்றி அவர்கள் இயக்கிய படங்கள் பற்றியும் இங்கு பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்தவர் இயக்குனர் வசந்த். ஆரம்பக் காலக்கட்டத்தில் சிறுகதை எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் தனது எழுத்து மற்றும் இலக்கியப் பயணத்தை தொடங்கினார். பிறகு இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தர் அவர்களிடம் சிந்து பைரவி, புன்னகை மன்னன் உள்ளிட்ட 18 படங்களில் உதவி இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றினார். பிறகு 1990ம் ஆண்டு பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களை வைத்து கேளடி கண்மணி என்னும் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார். அடுத்தாண்டில் “நீ பாதி நான் பாதி” என்னும் படத்தை இயக்கினார். இந்த படமும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

இப்படத்தில் நிவேதா என்ற ஒற்றை வார்த்தையில் இசையமைப்பாளர் மரகதமணி அவர்கள் இசையமைத்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இவர் இயக்கிய 3வது படம் ஆசை தமிழகத்தில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் தெரிந்ததே. இப்படம் மிக பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது. அதோடு இயக்குனர் வசந்த் அவர்களுக்கு பல்வேறு விருதுகளையும் பெற்று தந்தது. அதற்கு அடுத்தாண்டு “நேருக்கு நேர்” படத்தின் மூலம் நடிகர் சிவக்குமார் அவர்களின் மகன் நடிகர் சூர்யா அவர்களை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.

1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார், படமும் மாபெரும் வெற்றி பெற்றது. 2000 ஆண்டு இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கிய 2 படங்கள் வெளியானது. ஒன்று “அப்பு”, மற்றொன்று “ரிதம்” இதில் ரிதம் படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் ரசிகர்களின் மனங்களை வருடியது. இன்றளவும் இயக்குனர் வசந்த் அவர்கள் எனக்குப் பிடித்த படம் ரிதம் தான் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2003 ஆம் ஆண்டு “ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே” என்ற படத்தின் மூலம் ஐந்து இசையமைப்பாளர்களை ஒரே படத்தில் அறிமுகப்படுத்திய புதிய சாதனையை நிகழ்த்தினார். பிறகு 2007 ஆம் ஆண்டு “சத்தம் போடாதே” உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இவரின் இயக்கத்தில், 2013 ஆம் ஆண்டு மூன்று பேர் மூன்று காதல் படம் சரியாக போகவில்லை. இதற்கு அடுத்து ஓ.டி.டி தளத்தில் வெளியான “சிவரஞ்சனியும் சில பெண்களும்” என்ற படம் இயக்குநர் வசந்த் அவர்களுக்கு தேசிய விருது பெற்று தந்தது.

குறும்படங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட விளம்பர படங்களையும் இயக்குநர் வசந்த் அவர்கள் இயக்கியுள்ளார். மொத்தத்தில் இயக்குநர் வசந்த் அவர்கள் ஒரு வித்தியாசமான திரைமொழி கலைஞர் தான்.

 

 

 

Previous articleநல்ல படங்களை கோட்டை விட்டு மொக்கை நடிகர்களாக வலம் வரும் டாப் 5 ஹீரோக்கள்!!
Next articleஎதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள்!!