ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண்! மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம்.
மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி என்பது இவரின் பெயர். அவர் பார்வை சவால் கொண்ட ஒரு மாற்றுத்திறனாளி. இவர் தற்போது ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணிக்கு தகுதி ஆகியுள்ளார். இந்த சாதனை அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்திய குடியுரிமை தேர்வின் முடிவுகள் இன்று வெளியானது. மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் நம் மதுரையை சேர்ந்த பூரண சுந்தரி 286ஆம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் சிம்மக்கல் ஊரின் அருகிலுள்ள மணி நகரம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன்- ஆவுடை தேவி. இவரது மகள்தான் பூரண சுந்தரி. இவருக்கு பார்வை குறைபாடு உள்ளது.
பூரண சுந்தரியின் 5 வயதிலேயே பார்வை நரம்புகள் சுருங்கியதால் கண்பார்வையை இழந்துள்ளார்.
பார்வை சவால் கொண்டவராக இருந்தபோதிலும் தன்னம்பிக்கையோடு முதல் வகுப்பிலிருந்தே நன்றாக படித்து வந்துள்ளார்.
சம்மட்டிபுரத்தில் உள்ள கேஎன்பிஎம் எம்பிஎஸ் உயர்நிலைப் பள்ளியில் மதுரை ஒருங்கிணைந்த கல்வி IEDSS-ல் சிறப்பு கல்வி மூலம் படித்து வந்துள்ளார்.
பத்தாம் வகுப்பில் 471 மதிப்பெண்ணும் பன்னிரண்டாம் வகுப்பில் 1092 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இளங்கலை பட்டம் ஆக இலக்கியம் ஆங்கிலம் பயின்றுள்ளார்.
மனம் தளராத பூரண சுந்தரி:
சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த பூரண சுந்தரி மனம் தளராமல் படித்து வந்துள்ளார்.
இந்த சவாலை தன்னை சாதிக்க தூண்டியதாகவும் கூறுகிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு ,வங்கி தேர்வு மற்றும் பல தேர்வுகளை மனம் தளராமல் 20க்கும் மேற்பட்ட தேர்வுகளை எழுதி உள்ளதாகவும் கூறுகிறார்.
எவ்வளவுதான் போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் மனம் தளராத பூரண சுந்தரி அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார். நிச்சயம் ஒருநாள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது முனைப்பான நோக்கம். 2018 ஆம் ஆண்டு வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்று ஊரக வளர்ச்சித் துறையில் கிளார்க்காக பணிபுரிந்து வரும் நிலையில் நான்காவது முறையாக குடியுரிமை பணிக்கான தேர்வை எழுதி உள்ளார். வெற்றியும் அடைந்து விட்டார்.
வெற்றி குறித்து பூரண சுந்தரி கூறியதாவது:
நான் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் எனது பெற்றோர்களின் பேருதவி என்னை இந்தத் தேர்வில் வெற்றி அடையச் செய்தது.
அவர்களை பாடம் படிக்கச் சொல்லி நான் காதில் கேட்டு மனப்பாடம் செய்து கொள்வேன். இதனாலேயே என் இலக்கை அடைய முடிந்தது.மேலும் போட்டி தேர்வுகளுக்காக பல நகரங்களில் சென்று தங்கியபோது நண்பர்களின் உதவியும் வெற்றி இலக்கை அடைய செய்தது.
சின்ன வயதிலிருந்தே என் அம்மா கற்றுத்தரும் பாடங்களை கேட்டுத்தான் நான் கல்வி பயின்றேன்.அதனால் என் அம்மா எனக்கு ஒரு ஆசிரியர்.
நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதையே மறந்து போகும் அளவிற்கு என் பெற்றோர்கள் என்னை நலமுடன் பார்த்துக் கொண்டனர் என்று அவர் கூறினார்
நான் எதிர்கொண்ட சவால்கள் அவமானங்களும் என்னை ஆட்சிப் பணியில் அமர வேண்டும் என ஆசை பட வைத்தது.என்னை போல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.
அரசு அறிவிக்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவி வேண்டும் என்பதே என்னுடைய கடமை என்று அவர் கூறினார்.
என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் முடங்கிக் கிடக்காமல் முயற்சி செய்து வெற்றி பெறுங்கள். போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள் என அறிவுறுத்துகிறார்.