ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதி வென்றே தீரும்! வைகோ அறிக்கை!!

Photo of author

By Savitha

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதி வென்றே தீரும்! வைகோ அறிக்கை!!

ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்தது குறித்து வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி மீது குஜராத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், மார்ச் 23 ஆம் தேதி, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக்கிறது.

சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததும், பா.ஜ.க. அரசு அவசர அவசரமாக அவரது மக்கள் அவை உறுப்பினர் பதவியைப் பறித்தது. தற்போது தனது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்திருப்பதால், இதனை எதிர்த்து ராகுல்காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், அதனைத் தொடர்ந்து தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் வரை சென்று நீதிக்காக போராடவும் வாய்ப்பு இருக்கிறது.

இருந்தாலும், பாசிச பா.ஜ.க. அரசுக்கு எதிராக தொடர்ந்து மக்கள் சக்தியைத் திரட்டி வரும் ராகுல்காந்தியின் குரலை ஒடுக்குவதற்கு பா.ஜ.க. அடக்குமுறைகளை ஏவி விடுகிறது.முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி தொடங்கிய ஒற்றுமை நடைபயணம் மக்கள் மன்றத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளால் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ராகுல்காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.

மக்களாட்சியின் மாண்புகளை புதைக்குழிக்கு அனுப்பி வரும் பாசிச பா.ஜ.க.வின் இத்தகைய செயல்கள் ஒருபோதும் வெற்றிப்பெறப் போவது இல்லை. நீதி வென்றே தீரும்.