வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு!

0
175

வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று காலை ஏழு மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு இடையில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் காலைமுதல் வாக்களித்து வருகின்றனர். இதனிடையே ஒருசில இடங்களில் வாக்குபதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குபதிவு தாமதமாக தொடங்கியது.

அந்த வகையில், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 42-வது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி ஒன்றில் இன்று காலை வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பழுதான எந்திரத்திற்கு பதிலாக புதிய எந்திரம் வைக்கப்பட்டு வாக்குபதிவு நடந்து வருகிறது.

இதேபோல், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 23-வது வார்டுக்கு உட்பட்ட வாக்குசாவடி ஒன்றில் வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, 50 நிமிடத்திற்கு பிறகு அந்த வாக்குபதிவு மையத்தில் வாக்குபதிவு தொடங்கியது.

திண்டுக்கல் 10-வது வார்டுக்கு உட்பட்ட ஒரு வாக்குசாவடி மையத்திலும் வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பழுதான எந்திரத்திற்கு பதிலாக புதிதாக எந்திரம் வரவழைக்கப்பட்டு அதன் பிறகு வாக்குபதிவு தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 வாக்குசாவடி மையங்களில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து, அதை சரிசெய்த பிறகு, வாக்குபதிவு சிறிது நேரம் தாமதமாக தொடங்கியது. பெரம்பலூர் நகராட்சி 4-வது மற்றும் 5-வது வார்டுக்கு உட்பட்ட வாக்குசாவடியில் வாக்குபதிவு எந்திரம் பழுதானதை தொடர்ந்து, மாற்று எந்திரம் பொருத்தப்பட்டு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

இதுபோல், பல இடங்களிலும் வாக்குபதிவு எந்திரங்களில் ஏற்பட்ட பழுதின் காரணமாக வாக்குபதிவு தொடங்குவதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டது. அதன் பின், வாக்காளர்கள் வாக்குசாவடிக்குள் அனுமதிக்கப்பட்டு வாக்கு செலுத்தி வருகின்றனர்.

Previous articleதிடீரென பற்றியெரிந்த லாரி:! கோவில்பட்டி அருகே பரபரப்பு!
Next articleஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!!